Already a Member?

Login to your account.

 | Forgot your password

Share this post
உயிர் காந்த மையம் Genetic Center ஆகும், இதனை கருமையம் என்றும் கொள்ளலாம். விந்து, உயிராற்றல், சீவ காந்தச் சுழல் இம்மூன்றையும் இனணத்து உடலின் மையப் பகுதியில் மூலாதாரமென்று யோகியர்கள் வழங்கிய உயிர் நிலையமே கருமையம் ஆகும். இறை நிலையும் அதன் அலையாற்றலும் இனணந்து செயல்புரியும் மனித வாழ்வின் இயற்கை நியதியாகும் இந்தக் கருமையம். இதுவே ஆன்மா என்றும், அகம் (Soul) என்றும் உயிர் நிலை என்றும் வழங்கப் படுகின்றது.
மனிதனுடைய எண்ணம், சொல், செயல் எனும் மூன்று வினைகளையும் காந்த அலைகளாக மாற்றப்பட்டு சுருக்கமாக கருமையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. முன் பிறவி பின் பிறவி இவைகளை இணைத்தும், உயிர்த்துகள் மையம், உலகங்களின் ஈர்ப்பு மையம், எல்லா உயிர்களின் கருமையம் இவற்றோடு இறைவெளி மூலம் ஒவ்வொருவருடைய கருமைய மும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது. வினைப் பதிவுகளுக்கேற்ப விளைவுகளை தவறு இன்றி அளித்துவரும் பேரியக்க மண்டல கணிப்பொறி (Universal Computer) ஆக விளங்கும் திருவருள் நீதி மன்றமே சீவகாந்தக் கருமையம்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் நல்லதைப் புகுத்த வேண்டியது என்ற முறையில் ஒவ்வொரு குடும்பத்திலேயும் மனவளக்கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே. இதனால் மனம் ஒடுங்குகிறது; அடங்குகிறது, அறிவு நுட்பம் பெருகுகின்றது. திடம் பெறுகின்றது. சிந்திக்கும் ஆற்றல் பெருகுகின்றது. அந்தச் சிந்திக்கும் ஆற்றல், அறிவு நுட்பம் இவை கிடைத்துவிட்டால் அவற்றின் கீழே பொக்கிஷம் போல அனைத்து நலங்களும் கிடைக்கும். எல்லா மனிதர்களுக்கும் தேவையான அத்தனையும் கிட்டும்.

comments : 0views : 671

Share this post
இறை வெளியின் நுன் பகுதியே உயிர்; உயிரிலிருந்து எழும் அலையே காந்தம்; உயிர் மையத்திலுள்ள புள்ளியே தெய்வம். அதுவே அறிவு. அதன் படர்க்கை நிலையே மனம், ஒன்றிலிருந்து ஒன்றாக ஒரே பொருள் முப்பொருளாகி, இம் மூன்றும் கூடிய சிறப்பியக்கமே பேரியக்க மண்டலமும், அனைத்து உயிர்களும்.

comments : 0views : 596

Share this post
உயிரினம் உற்பத்தியாகிறது, வளருகிறது, வாழ்கிறது மரித்து விடுகிறது. இந்த நியதியே மனிதனுக்கும். பிறக்கின்றோம், தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் சமுதாய அறிவாற்றல் செயல் திறமைகளால் அடைந்த முன்னேற்ற சாதனங்களையும் அவ்வப்போது வாழ்ந்து வரும் கூட்டுறவின் ஒத்துழைப்பையும் கொண்டு வாழ்கிறோம், மரித்து விடுகிறோம். வாழும் காலத்தில் உணரும் இன்ப துன்பங்களையும் அவற்றை அடைந்து அனுபவிக்கும் பல்வேறு வழிமுறைகளையும் தவிர மனித இனம் இதுவரையில் கண்டது வேறு என்ன? இனி காணப்போவதில்தான் இதைவிட அதிகமானது என்ன இருக்க முடியும்? துன்பமிலா இன்பத்தை, தொடர்ச்சியாக இன்பத்தைத் தேட வேண்டாமா? அதுதான் பேரின்பம். அதை அடைய உதவுவது ஞானம்.

comments : 0views : 585

Share this post
May the leaders of the world be blessed with vibrant experience of
Life Divine immanent within them
May mankind be blessed with a World Federation to protect and
Preserve the borders of all countries and nations
May the people of the World live without hatred, fear and war
Reaping and conserving the natural wealth as a reward for their
Honest toil and labour
May humanity be blessed with the priceless perennial treasure of abiding peace.

comments : 0views : 441

Share this post
The Vegaries of untrained mind are such that when it gets attached to a person or a thing it sees nothing but good pleasant features therein. After attaining the object of desire , the very same mind starts fault finding and slips into the slough (marsh) of depression.
- Vethathiri Maharishi

comments : 0views : 403

Share this post
"Akkinai" is the centre where the throne is located
Where the soul sits in splendour with sceptre and crown.
It is the seat of command, where all orders are born.
When the grace of the master takes me to this seat,
I become aware of awareness itself.

No longer for me the darkness and delusion.
The result of ignorance and unreal illusion.
My thoughts and my actions, my words and my deeds,
Are no longer erratic, the spurts of emotion
But are moulded and structured
In the anvil of Time and in the sanctum of Awareness.

comments : 0views : 475

Share this post
திருமூலர், திருவள்ளளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமாள் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணி ஆற்றி வருபவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் 1911-ஆம் ஆண்டு எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே அவருக்குக் கடவுள் யார்? உயிர் என்றால் என்ன? வறுமை எதனால் ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்ற வேட்கை எழுந்தது. பல ஆண்டுகள் மேற்கொண்ட அயரா ஆராய்ச்சியின் வாயிலாக இக்கேள்விகளுக்கான விடையைத் தானும் உணர்ந்து உலகிற்கும் உணர்த்தி வருகிறார்.
சுய முயற்சியின் மூலமே வாழ்க்கையில் முன்னேறிய அவர் தியான முறைகளில் சிறந்ததான எளிய முறைக் குண்டலினி யோகம், அவயங்களை வருத்தாத உடற்பயிற்சி, தளராத தற்சோதனை, உயிர்ச்சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் சித்தர்கள் கண்ட நெறியான காயகற்ப யோகம் - இவை இணைந்த வாழ்க்கை நெறியைப் போதித்து, மனிதகுலம் உய்ய அருட் தொண்டாற்றி வருகிறார்.
மேலும் காந்தத் தத்துவத்தின் மூலம் தெய்வநிலை, உயிர்நிலை, அறிவுநிலை இவற்றைப் பொது அறிவு படைத்த சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி வருகிறார். மனிதகுல நலனுக்குக் தேவையான கருத்துகளை எளிய நடையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலநூல்களை எழுதி விளக்கி வரும் மகரிஷி அவர்கள் சுமார் ஆயிரத்து ஐந்தூறுக்கும் அதிகமான கவிகளையும் இயற்றியுள்ளார்.
மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவியிலும், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இல்லறத்தில் இருந்தவாறே துறவற மனப்பான்மையை மேற்கொண்ட மகரஷி அவர்கள் தமது 81 வயதிலும் உலக சமாதானத்திற்காக அயராத சேவை புரிந்து வருகிறார். பல வருடங்களாக வௌருநாடுகளுக்கும் சென்று ஆன்மீகப் பணியாற்றி வருகிறார்.
தத்துவத்திலே அவ்தைதத்தையும் யோகத்திலே ராஜயோகத்தையும் பாமர மக்களுக்கும் உணர்ந்து கொள்ளும் வகையிலே அவர் கற்பிக்கும் உளப்பயிற்சி அமைந்திருக்கின்ற காரணத்தால், 'பாமர மக்களின் தத்துவ ஞானி' (Common Man's Philosopher) என்று போற்றப்படுகிறார்.
மகரிஷி அவர்கள் வெளிருயிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ விஞ்ஞானத்திற்தோ புறம்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

comments : 0views : 449

Share this post
மகான் என்பதன் பொருள் என்ன ? மகா + ஆன் = மகான்.

         உயர்ந்த ஆன்மா. அறிவில் தெளிந்த ஆன்மா. அன்பும், கருணையும், ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறிகளை கடைபிடிக்கும் ஆன்மா. இவ்வாறு “மகான்” என்பதற்கு பலவிதமான விளக்கங்கள் கூறலாம். இப்படி வாழ்ந்தவர்கள் ஆதிகாலத்திலிருந்தே பலபேர் உள்ளனர். புத்தர், மகாத்மா காந்தி, மதர் தெரஸா போன்றோர் உயர்ந்த ஆன்மாக்கள். தன்னுடைய வாழ்க்கையையே ஒரு பாடமாக மற்றவர்கள் கடைபிடிக்கும்படி வாழ்ந்து காட்டியவர்கள். இவ்வரிசையில் மகானாக வருவபர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        இத்தகைய மகான்களிடம் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் பிறர் என்ன செய்தால் மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழ முடியும் என்று சொல்கிறார்களோ அவ்வாறே அவர்களும் வாழ்ந்து காட்டியுள்ளனர். ஆனால் நம் சமுதாயத்தில் உள்ள மக்கள் அத்தகைய மகான்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் அருமை, பெருமையை புரிந்து கொள்வதில்லை. அதோடு அவர்களை போற்றி புகழ்வதோடு நிறுத்திக் கொள்வர். அவர்கள் வாழ்வது போல் நம்மால் முடியாது. அவர்கள் தனிப்பிறவிகள், மகான்கள் என்று காரணங்களை மேற்காட்டி தன் இயலாமையை மறைத்து, அவர்கள் போல் வாழ்வதற்கு முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால் வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்கள், தான் சொல்வதை செய்வதால் மனிதருள் மாணிக்கமாக திகழ்கிறார்கள். அவருடைய கவியில் மனிதருள் உயர்ந்தோர் யார் என்று குறிப்பிடுகின்றார்.

”மனிதனென்ற உருவினிலே மக்களுண்டு

மனமறிந்த தேவருண்டு மதிநிலைத்த மனிதருண்டு

மனமறிந்து மனஇதமாய் மாக்களுக்கும் மக்களுக்கும்

மனமுவந்து தொண்டாற்றும் மாமுனிவர் முழுமனிதன்.”

          வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒவ்வொரு மனிதனும் இன்புற்று வாழ, உடல் நலம், மனவளம், நட்பு நலம் காக்க பிறவியின் பயனான முழுமைப் பேறு அடைய வழிமுறைகளைக் கொடுத்துச் சென்றுள்ளார். எள்ளளவும் சந்தேகமில்லாமல் அவர் சொன்ன வழிகளைக் கடைபிடித்து வாழ்ந்தால், குருவின் வழிகாட்டலின் மூலம், நாமும் மகானாக முடியும்.

           நமக்கு அவர்கள் அளவிற்கு மன உறுதி இல்லாததால்தான் பயிற்சி முறைகள் தேவையாக உள்ளன. பயிற்சிகள் செய்யும் போது உடனே பலனளிக்கமால் போனால் மனம் தளர்ந்து விடுகிறோம். “முயற்சி திருவினையாக்கும்” என்ற பழமொழியெல்லாம் மற்றவர்களுக்கு தான் !!! நமக்கு என்று வரும்போது மாற்றம் தெரியவில்லையெனில் வேறு முறைகளை கையாள ஆரம்பிக்கிறோம். பலவிதமான சந்தேகங்கள் (சந்து + ஏகம் ) வருகின்றன. வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்ந்த காலத்தில், நம்மில் பலர் அவர் வாழும் விதம் கண்டிருக்கிறோம். எனவே மனம் தளராமல் பயிற்சிகளைக் கடைபிடித்து நாமும் உதாரண ஆன்மாக்களாக இருந்து அவர் வகுத்த பயிற்சி முறைக்ளை மற்றவரும் பெறுவதற்கு தொண்டு செய்வோம், வளம் பெறுவோம். வாழ்க வளமுடன்.
-மூத்த பேராசிரியை. ஜெயந்தி பாலசந்திரன்

comments : 0views : 439

Share this post
ஐயா, குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?                                                                                                                                                             பாலகுமாரன்: உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன் வாழ்க்கைப் பற்றிய அறிவை தன் சக உயிரினங்களிடமிருந்து தான் பெறுகின்றது. உடை உடுத்தலை, உண்ணுதலை, உறங்குதலை, கூடிப்புணர்தலை, இயற்கை உந்துதல் கொடுத்தாலும் அது சக உயிரினங்கள் சொல்லிக் கொடுக்க, அந்த அனுபவத்தை கிரஹித்துக் கொண்டு இன்னும் சீராக வாழ்கிறது. இந்த சீரான வாழ்க்கைக்கு நாகரீகம் என்று பெயர்.

எல்லா செயல்களையும் நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்கிறீர்களே அன்றி எதையும் நீங்களாக அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டதை நேர்த்தியாக செய்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், வாழ்வின் அறிவு என்பது சக உயிரினமிடத்திருந்தே வருகிறது. தலை வாருதலிலிருந்து காலணி அணிவது வரை மற்றவர்கள் சொல்லி தந்துதான் அறிந்து கொள்கிறீர்கள் என்கிற போது வாழ்வின் ஆதாரமாக உள்ள ஆத்ம தாகத்தை, உயிரின் தவிப்பை, தன் இருப்பை அறிவது என்பதை எவரும் அறியாமல் நீங்களாக உணர்ந்து கொள்ள முடியுமா? இதை நானாக தெரிந்து கொள்வேன் என்று இறுமாந்து திரிவது நல்லதா. கடவுள் அறிதல் அல்லது தன்னை அறிதல் என்கிற விஷயத்திற்கு வெகு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டிக்கு குரு என்று பெயர்.

குரு என்பவர் சாக்கு போக்குக்காக உங்களை சில மந்திர ஜபங்கள் செய்யச் சொல்லி, பூஜைகள் செய்யச் சொல்லி மெல்ல மெல்ல பிரம்ம ரகசியத்தை உபதேசிப்பார் என்று சொல்லப்படுகின்றது. கடவுள் தேடுதல் எதற்காக என்ற கேள்வி எழவில்லையெனில் வாழ்வு பூரணமாகவில்லை என்று அர்த்தம். வாழ்வினுடைய தினசரி விஷயங்களில் அலுப்பு ஏற்பட்டு இது என்ன வாழ்க்கை என்ற கேள்வி எழுகிற போது கடவுளைப் பற்றிய தாபம் அல்லது தன்னை அறிதலைப் பற்றிய ஏக்கம் எழுகிறது. அப்பொழுது வெகு நிச்சயம் குரு என்பவர் தேவை.

அந்த குரு தன்னை அறிந்தவராக இருக்கிறபொழுது உங்களுடைய தவிப்பை முற்றிலுமாய் உணர்ந்து உங்களை அறியாமல் உங்களை உங்களுக்குள் தள்ளுகின்ற ஆற்றலையும் பெற்றிருப்பார். அந்த ஆற்றல் மிக ரகசியமாய் உங்களில் பாய்ந்து உங்களுக்குள் உங்களை அறிவிக்கும். இது விஞ்ஞான பாடமல்ல. அடிப்படையாய் புரிந்து கொள்வதற்கும், பேசி தெரிந்துகொள்வதற்கும். தடித்த புத்தகங்களிலிருந்து கற்று கொள்வதற்குண்டான விஷயமுமல்ல. இது ரகசியமானது. ரகசியம் என்பதற்கு வேறு ஒருவருக்கு சொல்லக்கூடாது என்ற அர்த்தமில்லை. எப்படி உள்ளே வந்தது என்றே தெரியாத ரகசியம் இது. நீங்கள் எப்படி மாறினீர்கள் என்றே தெரியாத ரகசியம் இது. உங்களை அறியாது உங்களை மாற்றுவது என்பது தன்னை அறிந்த குருவால் வெகு நிச்சயம் இயலும்.
எனக்கும், கடவுளுக்கும் இடையே இன்னொருவர் எதற்கு என்று கேள்வி வருவது மிகப் பெரிய அறியாமை. தான் எல்லாம் அறிந்துவிட்டோம், தன்னால் சகலமும் அறியமுடியும் என்கிற அறியாமை. உங்களுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தவரையே குரு என்று கொண்டாடிக் கொண்டிருக்கிற பொழுது கடவுள் தேடலை தானாக அறிந்து கொள்வேன் என்று கொக்கரிப்பது எவ்வளவு பெரிய பேதமை. உங்களை அறிவது தான் சரியான அறிவு. ஆனால் தன்னுள் தான் மூழ்குவது என்பது மிக மிக கடிமனான விஷயம்.

குரு என்பவரால் மட்டுமே உங்களை உங்களுக்குள் தள்ள முடியும். தங்களை அறிய வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு குருவினுடைய தேடலும் கூடவே வரும். அவருக்கு குரு அவசியமா என்ற கேள்வியே இருக்காது. குரு எங்கே என்கிற ஆவல்தான் இருக்கும்.

யார் குரு. நான் தான் குரு என்று சொல்லிக் கொள்கிறவர்கள் உங்களுக்கு குரு அல்ல. தன்னை உணர்தலே கடவுள் உணர்தல் என்கிற மகாவாக்கியம் உணர்ந்தவரே குரு. அவர் தன்னை உணர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதே இல்லை. கடவுள் தெரிந்துவிட்டது என்று குதிப்பதும் இல்லை. மாறாய் அவர் வாழ்க்கை முற்றிலும் மற்ற மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டிருக்கிறது. வாழ்வின் அநித்தியம், வாழ்வின் அபத்தம் புரிந்தபோது உள்ளுக்குளிலிருந்து ஒரு கருணை வெள்ளம் புறப்பட்டு சகலரையும் அணைத்து கொள்கிறது. யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இழந்து தொலைப்போம் என்கிற பரிதவிப்பு இருப்பின் யாரை வெறுக்க முடியும். எவரும் இங்கே நிரந்தரமில்லை என்கிறது மிக தெளிவாக வந்து விட்டால் எவரை வெறுக்க முடியும் எனவே எவரையும் வெறுக்காத கருணை மழை தான் குரு. கருணை உள்ளவர் முகத்தில் அற்புதமான தேஜஸ் இருக்கும். அவர் ஒவ்வொரு அசைவும் அன்பை பொழியும். கடவுள் ரூபமாகவே இருக்கும். அந்த குரு உபன்னியாசம் செய்கிறவர் அல்ல. மிக பெரிய பிரசங்கங்கள் நிகழ்த்துவதை காட்டிலும் தனித்தனியே ஒவ்வொரு மனிதரின் உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவைத் தொட்டு உசுப்பிவிடுவது தான் குருவின் வேலை. எவரைப் பார்த்ததும் உள்ளுக்குள் பெரிதாய் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு அவரை உங்களை அறியாமல் வணங்கத் தோன்றுகிறதோ அவரை பின்பற்றத் தோன்றுகிறதோ, அவரை கொண்டாட ஆசை எழுகிறதோ, அவரை உங்கள் குரு என்று கொள்ளலாம்.

இங்கே ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். மக்களுடைய யோக்கியதைக்கு ஏற்ப அரசாங்கம் அமைவது போல, கலை இலக்கியம் இருப்பது போல, உங்களின் யோக்கியதைக்கு ஏற்ப உங்களுக்கு குரு கிடைப்பார். உங்களுக்குக் காசுதான் வாழ்வின் பிரதானம் என்றால் உங்களுக்கு காசு தருகின்ற குரு கிடைப்பார். உங்களுக்கு சுகபோகம்தான் பிரதானம் எனில் சுகபோகம் தருகின்ற குரு கிடைப்பார். உங்களுக்கு கடவுள் தேடுதல்தான் பிரதானம் எனில் கடவுளை அறிந்த குரு கிடைப்பார். உங்கள் யோக்கியதைக்கு ஏற்ப குரு கிடைத்த பிறகு தான் உங்களை பற்றியே உங்களுக்கு தெரியவரும். குருவை எங்கே தேடுவது. கடைகளில் குரு தொங்கிக் கிடக்க மாட்டார். குரு இன்னவிதமாக இருப்பார் என்று எவராலும் சொல்லமுடியாது.

ஒரு ஜப்பானிய கேள்வி-பதில் ஒன்று உண்டு. சாலையில் நீ நடக்கும் போது புத்தர் உனக்கு எதிரே நடந்து வந்தால் நீ என்ன செய்வாய் என்று கேள்வி உண்டு. இந்த கேள்விக்கு பதில் சொல்லும்படி பணிப்பார்கள். விழுந்து வணங்குவேன், சுற்றி வந்து கொண்டாடுவேன், என் வீட்டிற்கு அழைத்துப் போவேன், உபசரிப்பேன், எல்லோரையும் கூட்டிக் கொண்டுபோய் புத்தரை அறிமுகப்படுத்துவேன் என்றெல்லாம் பதில்கள் உண்டு. ஆனால், அவை உண்மையான பதில்கள் அல்ல. புத்தர் எப்படி இருப்பார் என்று யாருக்குத் தெரியும். ஏதோ ஒவியத்தைப் பார்த்து, சித்திரத்தைப் பார்த்து புத்தர் இப்படித் தான் இருப்பார் என்று நாம் நினைத்து கொள்கிறோம். புத்தர் என்ன விதமாக இருந்தார் என்று யாருக்கும் தெரியாது, உங்கள் முன் என்னவிதமாக தோன்றுவார் என்பதும் தெரியாது.

புத்தரைத் தேட வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டால் எதிர்ப்படுகின்ற ஒவ்வொருவரையும் இவர் புத்தரா? அவர் புத்தரா? இது புத்தரா? அது புத்தரா என்று தேடுவது போல நீங்கள் குருவை தேட வேண்டும். எல்லா இடத்திலும், எப்பொழுதும் இடையறாது, இடையறாது தேட வேண்டும்.உங்கள் தேடல் உக்கிரமடைந்தால், ஒருமுகப்பட்டால் குரு உங்களை நேரே வந்து சந்திப்பார். அவராகவே வந்து உங்களை தொட்டு உலுக்குவார். என்னைத் தானே தேடிக் கொண்டிருக்கிறாய். இதோ என்று எதிரே வந்து நிற்பார் என்று சொல்லப்படுகின்றது.

குருவை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட ரூபத்தில், ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் கண்டுகொள்ள முடியாது. குரு மனிதராகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. பெரும் வானம் சிலருக்கு குருவாக அமைந்திருக்கிறது. காற்றின் இரைச்சல் குருவாக அமைந்திருக்கிறது. குரு தேடுதல் என்பது மனம் ஒருமுகப்பட்ட ஒரு உணர்வு. அந்த உணர்வு நிச்சயம் தேடுபவருக்கு குருவை கொண்டு வந்து கொடுக்கும்.

comments : 0views : 436

Share this post
  மறதியும்-விழிப்பும்
    எளிய முறை குண்டலினி                                                                                                
    ஆக்கினைச் சக்கரம்
    சாந்தியோகம்
    துரிய நிலை
    தற்சோதனை
    துரியாதீதம்
    சமுதாயச் சீர்திருத்தம்

நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம். குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்?
காப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.
உடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.
ஐம்புலன்கள், கை, கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம்இ தூங்குகிறோம்.
பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.
இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.
மறதியும்-விழிப்பும்

எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe) விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.
உயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன். போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும், இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.
உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான். தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு, தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான்.
இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில்தான் எண்ணம், சொல், செயல், இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.
இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும் இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும், சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.
ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும். எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பாரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவுகளாகும் (Impressions Of Deeds).

இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது. பிணக்கும், பகையும், போட்டியும், போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக'கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும்.
உலகில் அமைதி நிலவவேண்டுமெனில், மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில், தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும். தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட, உயிரணுக்களில் பதிவாகியிருக்கும், தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins) போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு, தூய்மை, ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.
இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும், சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம், சொல், செயல், பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும்.
தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும், பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள். இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி, உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.
காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்று வகையாலும் உடலோம்பல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே உயிரோம்பலும் மனிதனுக்கு இன்றியமையாதது என அறிந்தோம். உயிர் தூய்மைக்கான பக்தி நெறி, ஞான நெறி, இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு, இயக்கம், விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்.
பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம், உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும். இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது.
மனதை உயிரில் ஒடுக்க வேண்டுமெனில், இயக்க மையத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் உயிர் பரவி இருந்தபோதும் அது மூலாதாரம் எனும் முதுகுத்தண்டின் கீழ்ப் புறத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. உயிராற்றலுக்குக் குண்டலினி சக்தியென்னும் ஒரு சிறப்புப் பெயருண்டு. இதனால்தான் குண்டலினி அமர்ந்திருக்கிறதென்று கூறுவது வழக்காயிற்று.
உயிராற்றலான குண்டலிணி சக்தியின் இயக்க மையத்தை புருவ மையத்துக்கு மாற்றியமைத்தால்தான் மனதை அதில் ஒடுக்க முடியும். உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து மாற்றவும் பின் அதில் மனதை ஒடுக்கவும் ஏற்ற பயிற்சி தான் குண்டலினி யோகம்.
உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பிப் புருவ மையம் கொண்டு வர மூச்சுப் பயிற்சியைப் பின்பற்றினார்கள். நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை நெற்றிக்குக் கொண்டு வர பல ஆண்டு காலம் தேவை. மேலும் அச்சக்தி ஏறிவரும் வழியில் சுவாதி\u202டிடானம் எனும் நீர் மையத்தையும், மணிப்புரகம் எனும் வெப்ப மையத்தையும், அனாகதமெனும் காற்று மையத்தையும், விசுத்தி எனும் புதாகாச மையத்தையும் கடந்து வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இடப்பெயற்சி கொள்ளும்போது சில பல உடல் நோய்கள் காணும். அவற்றையெல்லாம் அனுபவித்துப் பெரு முயற்சியோடு தான் மேலேறி வரவேண்டும். இல்லறத்தில் வாழ்வோர்களுக்கு இம்முறை ஏற்றதல்ல.
எளிய முறை குண்டலினி

எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.
மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினைச் சக்கரம்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.
அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.
ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.
தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.

சாந்தியோகம்

ஆக்கினைச் சக்கரமாகிய நெற்றிக் கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும். அப்போது தலை கனம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தி யோகப் பயிற்சிக்கு ஏற்றதாகும். அப்போது ஆசானை ஆண்டி சாந்தி யோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் சாந்தி யோக முறையறியாமல் பலர் குண்டலினி ஏற்றத்தைத் தாங்கும் சக்தியின்றி துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தி யோகம் தெரிந்துப் பயிலுதல் வேண்டும்.
துரிய நிலை
ஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும். உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். துரியநிலை யோகமானது ஆசான் தனது தவ ஆற்றலைக் கண்கள் மூலம் மாணவனுக்குப் பாய்ச்சிக் குண்டலினி சக்திக்கு ஒரு உயர் ஆற்றல் அளிக்கும் செயலாகும். மூளையின் நுண் பகுதிகளையெல்லாம் தூண்டி இயங்க வைக்கும் ஆற்றல் துரியநிலை யோகத்திற்கு உண்டு. இதன் மேண்மையினை எழுதி விளக்குவது அரிது. அவரவர்கள் அனுபவத்தால் பயனடைந்து விளங்கிக் கொள்ளவேண்டியது.

தற்சோதனை

துரியநிலை யோகத்தால் ஆன்மா தூய்மையடைந்து வரும்போதே தற்சோதனைப் பயிற்சியினைத் தொடங்க வேண்டும். எண்ணம், சொல், செயல் இவற்றின் விளைவறிந்து செயலாற்றும் ஒழுக்கப் பயிற்சியிலிருந்து தான் யார்? என்று தெளிந்து கொள்ளும் முழுமைப் பேறு வரையில் இப்பயிற்சி விரிவடைந்து பயன் தருகின்றது. ஒழுக்கம், கடமை, ஈகை, உயிர் விளக்கம், மெய் பொருள் விளக்கம் அனைத்தும் தற்சோதனை பயிற்சியினால் பெறப்படும்.

துரியாதீதம்

தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும். இதனைச் சமாதியென்றும், சீவப்பிரம்ம ஐக்கிய முக்தி என்றும் கூறப்படுகின்றது. மனிதனாகப் பிறந்தவன் அறிந்து முழுமைபெற வேண்டிய விளக்கம் அனைத்தும் அந்த யோகத்தால் சித்தியாகும்.
முறையாக இத்தகைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றால் மனிதன் தனது அறிவில் முழுமை பெறலாம். உணர்ச்சி வயப்படாமல் சம மன நிலையில் கடமையாற்றி மகிழ்ச்சியோடு வாழலாம். வாழப் பறந்தவர்கள், வாழ்வை விளங்கிக் கொண்டுதானே வாழவேண்டும்? ஆகவே மெய்ஞ்ஞானம் எனும் அறிவின் விளக்கப்பேறு மனிதனுக்கு இன்றியமையாதது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதுக்கு வந்த உடன் பயின்று பலன் பெற வேண்டிய உளப்பயிற்சியே குண்டலினி யோகம்.

சமுதாயச் சீர்திருத்தம்

உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி, ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில், மயக்கநிலையில் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும்பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும், வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம், ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.
பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும், உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.
இந்த சங்கத்தின் அருள் விளக்கப் பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள். இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.
நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன். இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.
இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அவை

    ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.
    இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.
    பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.
    ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.
    ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.

இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெய்விளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள். இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.
பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.

comments : 0views : 478